நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ‘காக்ரோச் ஜனதா கட்சி’ முன்னெடுத்த தீவிரப் போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தான் விலகியதற்கான உண்மையான காரணத்தை பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஜி.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்ட சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே அவர், அமைச்சர் பதவி தனக்கு எப்போதுமே முக்கியமில்லை என்றும், இந்தியாவின் கல்வித் தரத்தை உயர்த்தி நாட்டை உலகின் வழிகாட்டியாக மாற்றுவதே தனது பிரதான இலக்கு என்றும் தெரிவித்தார்.
Gen Z நமது குழந்தைகள். சில நபர்கள் அவர்களைத் தவறான வழியில் திசைதிருப்ப முயன்றனர். அப்போது எனக்கு எந்தத் தனிப்பட்ட பிரச்சினையும் இருக்கவில்லை. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் இரண்டு கோடி குழந்தைகள் பிறக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 20 கோடி குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களுக்குப் பல லட்சியங்கள் உள்ளன; எதிர்காலத்தில் அவர்கள்தான் இந்தியாவை உலகின் வழிகாட்டியாக மாற்றுவார்கள். எனவே, இந்த அமைச்சர் பதவி எனக்கு முக்கியமல்ல,” என்று அவர் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார்.
நீட் தேர்வு விவகாரம் மற்றும் சிஜேபிதலைவர் அபிஜித் திப்கே தலைமையிலான தொடர் போராட்டங்களை அடுத்து, கடந்த ஜூலை 25 அன்று தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் பிரதான் பதவி விலகமாட்டார் என்றும், அவருக்கு முழு அமைச்சரவையின் ஆதரவு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. எனினும், பல்வேறு தரப்பு அழுத்தங்களுக்குப் பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரகலாத் ஜோஷி இடைக்கால கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
முன்னதாகத் தனது ராஜினாமா கடிதத்தில், இந்த விவகாரம் தனக்கு “தனிப்பட்ட கௌரவப் பிரச்சினை” அல்ல என்று குறிப்பிட்டிருந்த பிரதான், நாட்டின் இளைஞர்களின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் தாம் பெரிதும் மதிப்பதாகத் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தொடுத்த வழக்குகளை அரசு வாபஸ் பெற ஒப்புக்கொண்டதை அடுத்து, தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தங்களின் மகத்தான வெற்றியாகக் கொண்டாடிய CJP அமைப்பினர் தங்களது போராட்டங்களை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
