தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க “Round Trip” எனும் திட்டத்தில் டிக்கெட் புக் செய்யும் நடைமுறையை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.

விமானங்களில் எப்படி ஒன் வே , டூ வே என புக் செய்யும் போது கட்டணங்களில் சலுகை கிடைக்குமோ இப்போது இந்திய ரயில்வேயிலும் இதே போன்ற முறையை அறிமுகம் செய்துள்ளனர். வரவிருக்கும் நாட்களில் தீபாவளி, சத் பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதை தவிர்க்கும் வகையில் “Round Trip” எனும் திட்டத்தை ரயில்வே தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் முன் பதிவு செய்யும் போது , Return பயணசீட்டில் உள்ள மொத்தத் தொகையில் 20% தள்ளுபடி வழங்கப்படும் என இந்திய ரயில்வே கூறியுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் பயணிகள் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரையிலான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம், இதற்கு சில விதிமுறைகள் உள்ளது என்று தெரிவிக்கபட்டுள்ளது.

அதன்படி, ஃப்ளெக்ஸி கட்டண முறை பின்பற்றப்படும் ரயில்களுக்கு இத்திட்டம் பொருந்தாது , டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு அதில் எந்த ஒரு மாற்றமும் செய்ய முடியாது , ரயில்வே பயணக் கூப்பன்கள் – வவுச்சர் உள்ளிட்டவை முன்பதிவின்போது அனுமதிக்கப்படாது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் புறப்பாடு / வருகை இரண்டிற்கும் ஒரே நேரத்தில் ரயில் டிக்கெட்டை கட்டாயம் முன் பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனை இந்திய ரயில்வே எண் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் அல்லது ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு கவுண்டருக்கு நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் இந்திய ரயில்வே கூறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version