ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமானவரின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25லட்சம் உடனடியாக வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 12-ம் தேதி ஆமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து மேலே எழும்பிய சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்கிருந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதிக் கட்டடத்தின் மேல் விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் என மொத்தம் 274 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1கோடி வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. மேலும் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிர்தப்பிய இந்தியாவை சேர்ந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும் ரூ.1கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், உயிர் பிழைத்த ஒரு பயணியின் குடும்பத்திற்கும் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தலா 25 லட்சம் ரூபாய் இடைக்காலமாக வழங்கப்படும். டாடா சன்ஸ் ஏற்கனவே அறிவித்த 1 கோடி ரூபாயுடன், இது கூடுதலாகும்” என்று ஏர் இந்தியா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. சமீபத்திய விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்றும், இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் தேவையான உதவிகளையும், ஆதரவையும் வழங்க எங்கள் குழுக்கள் அனைத்தையும் செய்து வருகின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.