இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் மீண்டும் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் ராணுவத் தளவாடங்களை இஸ்ரேல் தாக்கியதற்குப் பதிலடியாக ஈரான் கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஆதரவுக் குரல் எழும் என்று பேசப்பட்ட நாடுகளுக்கெல்லாம் ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் பாதிப்பு யாருக்கு?  

உலக வரலாற்றில் இஸ்ரேல் – ஈரானுக்கு இடையிலான போர் 40 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. இரு நாடுகளும் அவ்வப்போது தங்களுக்குள் தாக்கிக் கொண்டிருந்த நிலையில், கடந்த 2023-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்த போர், இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஹமாஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது. ஹிஸ்புல்லாக்களையும் எதிர்த்து தாக்கத் தொடங்கிய இஸ்ரேல், ஈரான் மீது கடும் கோபத்தில் இருந்தது. இந்த நிலையில்தான், நேற்று ஈரான் தலைநகர் மீது குண்டுமழை பொழிந்து, போரைப் பெரிதாக்கியது இஸ்ரேல்.

என்ன செய்தது இஸ்ரேல்

நேற்று (ஜூன் 13) ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ஆபரேஷன் ரைசிங் லையன் என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆராய்ச்சிக் கூடங்கள், யுரேனியம் செறிவூட்டு நிலையம், ராணுவ சுரங்க தளங்கள் முதலியவற்றின் மீது இஸ்ரேலின் டிரோன்கள், ஏவுகணைகள் பாய்ந்தன. அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் ராணுவத்தினர் வசிப்பிடங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நள்ளிரவில் தாக்கியதால் கோபமடைந்த ஈரான் டிரோன்கள், ஏவுகணைகளைக் கொண்டு பதில் தாக்குதல்களை நடத்தியது. இப்படியே இரு நாடுகளும் மாற்றி மாற்றி மோதி வருகின்றன. 

ஈரான் Vs இஸ்ரேல் – யார் பலசாலி? 

ஈரானிடம் இஸ்ரேலை விட 6 மடங்கு அதிகமான படை வீரர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ஈரான் 6 லட்சம் படை வீரர்களைக் கொண்டதாகும். இஸ்ரேலில் 1,70,000 படை வீரர்கள் மட்டுமே உள்ளனர். ஈரான் கடற்படையில் 18,000 பேரும், விமானப்படையில் 37,000 வீரர்களும் உள்ளனர். இஸ்ரேல் கடற்படையில், 9,500 வீரர்களும், விமானப்படையில் 34,000 வீரர்களும் உள்ளனர். வான் பாதுகாப்பைப் பொறுத்தளவில், இஸ்ரேலின் அயர்ன் டோம், டேவிட் ஸ்லிங் முதலிய ஏரோ அமைப்புகள் அதன் பாதுகாப்பு முதுகெலும்பாக இருக்கிறது.  குறுகிய தூரத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் அயர்ன் டோம் மூலமும், நீண்ட தூரத்திலிருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை டேவிட் ஸ்லிங் அமைப்புகளும் இடைமறித்துத் தாக்கும் திறன் கொண்டன. 

இஸ்ரேலை விட ஈரானிடம்தான் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிகிறது. வீரர்கள், ஆயுதங்களின் அடிப்படையில் ஈரான் பலம்வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் இஸ்ரேலிடம் அதிநவீன ஆயுதங்களும் மேம்பட்ட தொழில்நுட்பங்களும் உள்ளன. இதுவே இவ்விரண்டு நாடுகளையும் பலமான எதிராளிகளாய் ஆக்குகிறது. ஈரானுக்கு லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு இருக்கிறது. இவற்றின் பலம் கொண்ட இஸ்ரேலையும், அதை ஆதரிக்கும் நாடுகளையும் இஸ்ரேல் மிரட்டி வருகிறது. 

ஆதரவும் மிரட்டலும் 

ஆரம்பத்திலிருந்தே பயங்கரவாதத்திற்கு எதிரான போரையே முன்னெடுப்பதாக இஸ்ரேல் கூறி வருகிறது. ஈரான் மீதான இந்தத் தாக்குதலும் அப்படிப்பட்டதாகவே கூறப்படுகிறது. ஆனால், ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதி உட்பட 800-க்கும் மேற்பட்டோர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் நடத்தியபோது இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரட்டன், பிரான்ஸ் ஆகிய பெரும் நாடுகள் ஆதரவளித்தன. இப்போதும் அந்நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் எனப் பேசப்பட்டது. அதேபோல் ஈரானின் தாக்குதலை ரஷ்யாவும் கடிந்து கொண்டது. இந்நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தடுக்க நினைத்தலோ, இஸ்ரேலுக்கு உதவி செய்தாலோ மத்திய கிழக்குப் பிராந்தியங்களில் உள்ள அமெரிக்கா, பிரட்டன், பிரான்ஸின் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்காவோ 2015-ல் போடப்பட்டு தான் விலகிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் மீண்டும் புதுப்பிக்காமல் போனால் பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று எச்சரித்துள்ளது. பிரட்டனும் மத்திய கிழக்குப் பிராந்தியங்களின் ராணுவத் தளங்களைப் பாதுகாக்க படைகளை நகர்த்தியிருக்கிறது. 

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? 

அமெரிக்கா ஈரானை எச்சரித்தாலும், இஸ்ரேலுக்கான ஆதரவுக் குரலையும் கொடுக்கவில்லை. இந்தியா பாகிஸ்தான் போர் விவகாரத்தில் கடைபிடித்த சமாதானக் கொள்கையையே அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்தியாவுக்கு இஸ்ரேல், ஈரான் இரு நாடுகளுடனும் நட்புறவு உண்டு. இதனால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியில் சிறிதளவில் பாதிப்பு ஏற்படுவதால் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதைத் தவிர வேறெந்த பெரும் பாதிப்பும் இல்லை. எனினும், ஜார்ஜியா உள்ளிட்ட போர்ப் பதற்றம் நிலவும் பகுதிகளிலிருந்து இந்தியர்ளைப் பத்திரமாக மீட்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அரசு எச்சரித்துள்ளது. 

Share.
Leave A Reply

Exit mobile version