‘100 சதவீதம்’ தூய்மையானது அல்லது இயற்கையானது என்ற வாசகத்தைப் பயன்படுத்தி தேன், பசு நெய் மற்றும் சமையல் எண்ணெய்கள் போன்ற பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு டாபர் இந்தியா நிறுவனத்திற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தடை விதித்துள்ளது; இத்தகைய லேபிளிங் முறை சட்டத்திற்கு எதிரானது என்று அது கூறியுள்ளது.

டாபர் நிறுவனத்தின் இணையதளத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் “100% இயற்கை”, “100% தூய்மையானது”, “100% தூய்மை உத்தரவாதம்”, “100% ஆர்கானிக்” மற்றும் “100% இளநீர்” போன்ற மக்களைத் திசைதிருப்பும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக FSSAI தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்தத் தடையின் கீழ் தேன், ஆப்பிள் சீடர் வினிகர், எண்ணெய் (Virgin Coconut Oil), நல்லெண்ணெய், பசு நெய், தேங்காய் நீர், தேங்காய் பால் மற்றும் உள்ளிட்ட தயாரிப்புகள் அடங்கும். குறிப்பாக, ‘டாபர் ஹோம்மேட் தேங்காய் பால்’ (Dabur Hommade Coconut Milk) தயாரிப்பு “100% தூய்மை” என்ற வாசகத்துடன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே FSSAI நோட்டீஸ் அனுப்பியிருந்தாலும், டாபர் தரப்பிலிருந்து திருப்திகரமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

FSS (Advertising & Claims) Regulations, 2018 விதிகளின்படி, இந்த “100%” கூற்றுகள் தெளிவற்றவை, சரிபார்க்க முடியாதவை மற்றும் நுகர்வோரை ஏமாற்றக்கூடியவை என்பதால் இவை சட்டவிரோதமானவை என FSSAI சுட்டிக்காட்டியுள்ளது.

டாபர் ஹிமாலயன் ஆர்கானிக் ஆப்பிள் சீடர் வினிகர்’ மற்றும் ‘டாபர் ஆர்கானிக் தேன்’ ஆகிய தயாரிப்புகளில், FSSAI இன் முறையான ஆர்கானிக் ஒப்புதல் (Organic endorsement) இல்லாமலேயே ‘ஜைவிக் பாரத்’ (Jaivik Bharat) லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இது FSS (Organic Foods) Regulations, 2017 விதிகளுக்கு முரணானது.

பாதிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனையை உடனடியாக நிறுத்தும்படியும், இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் டாபர் நிறுவனத்திற்கு FSSAI உத்தரவிட்டுள்ளது.

மறுபுறம், இது குறித்து பதிலளித்துள்ள டாபர் இந்தியா நிறுவனம், “நாங்கள் FSSAI-யின் அறிவிப்பைப் பெற்றுள்ளோம், மேலும் எங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு மே  மாதம் FSSAI வெளியிட்ட அறிவுறுத்தலில், உணவுப் பொருட்கள் மற்றும் விளம்பரங்களில் “100%” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்து உணவு வணிக நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய விதிமுறைகளில் இந்த வார்த்தைக்கான முறையான வரையறை இல்லாததால், இது நுகர்வோர் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தும் என்றும் FSSAI எச்சரித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version