தமிழக அரசியலில் பெண்களை தொடர்புபடுத்தி பேசப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “அரசியலில் இருக்கும் ஆண்கள் உண்மையான மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு பதிலாக சம்பந்தமே இல்லாத பெண்களை அரசியல் விவாதங்களில் இழுப்பது முற்றிலும் தவறானது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “திமுகவைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் அரசியல் மேடைகளில் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேச முடிந்ததற்கு காரணம், அதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டதுதான். ஒருமுறை அல்ல, பலமுறை அவ்வாறு பேச அனுமதிக்கப்பட்ட பிறகே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்து குறித்து, “அவர் பேசியதன் மறைபொருள் எனக்கு முதலில் புரியவில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் பின்னர் விளக்கினார். அது தண்ணீர் இணைப்பு (Water Connection) பற்றிய பேச்சு என முதலில் நினைத்தேன். பெரும்பாலான பெண்களுக்கும் அதன் உண்மையான அர்த்தம் புரியவில்லை. அது ஆண்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையிலான இரட்டை அர்த்தப் பேச்சாக இருந்தது” என்று சின்மயி தெரிவித்துள்ளார்.

அத்துடன், “குறைந்தபட்சம் தனது ஆதரவாளர்களை அமைதியாக இருக்கச் சொல்லியிருக்கலாம் அல்லது அவர்கள் நாகரிகமாக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக அவர் இன்னும் மோசமான கருத்தை முன்வைத்தார்” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

“இதை விமர்சிப்பவர்கள் தான் தரக்குறைவாக சிந்திக்கிறார்கள் என்று கூறுவது எளிது. ஆனால் இதே அரசியல் சூழல், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எப்படி இழிவாக குறிப்பிட்டு பேசியது என்பதை நான் மறக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “முந்தைய தலைமுறை அரசியல்வாதிகளின் ஆபாசமான பேச்சுகள் இயல்பானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களின் பழைய பேச்சுகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால் புதிய தலைமுறை அரசியல்வாதிகள் அதைவிட சிறப்பாக நடந்து கொள்ள வேண்டும்; இன்னும் மோசமாக அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

” இந்த விவகாரத்தில் பெண்கள் இன்னும் அதிகமாகக் குரல் கொடுக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகக் கூறியுள்ள சின்மயி, கோபத்துடனும், பெண்கள் ஒருமைப்பாட்டுடனும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நேரம் இது” என்று வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version