ஜார்கண்ட் டி20 கிரிக்கெட் லீக் 2026 தொடரின் ஐந்தாவது நாள் ஆட்டங்கள் ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. சர்வதேச மைதான வளாகத்தில் நடைபெற்றன.
முதலாவது போட்டியில், டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஞ்சி டைட்டன்ஸ் அணி தடுமாறிய ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர்கள் முடிவில் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஜாம்ஷெட்பூர் அணியின் பந்துவீச்சில் பிரத்திக் ரஞ்சன் 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷ் ராணா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
120 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் சுதாரித்தபடி, 17.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணிக்காக குமார் தேவோப்ரத் 27 ரன்களும், ஆதர்ஷ் கிரி 27 ரன்களும் சேர்த்து முக்கிய பங்களிப்பு அளித்தனர். ரவி ஷர்மா 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். ராஞ்சி டைட்டன்ஸ் அணியின் சார்பில் சௌரப் சேகர் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பாக பந்துவீசினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில், டாஸ் வென்ற தன்பாத் டைமண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 6.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தபோது கனமழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மீண்டும் ஆட்டத்தை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டதால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தன்பாத் அணியின் விகாஷ் குமார் விஷால் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கோய்லாஞ்சல் சூப்பர் கிங்ஸ் அணியின் ஹர்ஷ் ராஜ் மற்றும் அமித் குமார் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
