அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. இது சர்வதேச சந்தையில் ஒரு கவலையளிக்கும் விஷயமாகும். ஆனால், ஒரு நாட்டில் நமது 1 இந்திய ரூபாய்க்கு 500 மடங்கு அதிக மதிப்புள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதாவது, நீங்கள் அங்கு வெறும் ரூ.1 கொடுத்தால், உங்களுக்கு சுமார் ரூ.500 கிடைக்கும். இதுகுறித்து விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானின் நாணயம், உலகின் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட நாணயமாக மாறியுள்ளது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில், ஈரானில் நம் ஒரு இந்திய ரூபாய் சுமார் ரூ.490 முதல் ரூ.500 ரியால்களுக்கு சமம். நீண்ட பொருளாதாரத் தடைகள், நாள்பட்ட பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் உறுதியற்ற தன்மை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஈரானின் நாணயம் ‘ஈரானிய ரியால்’ என்று அழைக்கப்படுகிறது. நவம்பர் 19ஆம் தேதி நிலவரப்படி, தற்போதைய மாற்று விகிதத்தைப் பார்த்தால், 1 இந்திய ரூபாய் = 476.01 ஈரானிய ரியாலுக்கு சமம் ஆகும்.
மேலும், நீங்கள் வெறும் ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஈரானுக்குச் சென்றால், நீங்கள் உண்மையிலேயே ஒரு ராஜாவைப் போல வாழலாம். அங்குள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் ஒரு நாள் தங்குவதற்கு ரூ.7,000 மட்டுமே செலவாகும். நீங்கள் ஒரு நடுத்தர அளவிலான ஹோட்டலை தேர்ந்தெடுத்தால், ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை மட்டுமே செலவாகும்.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஈரான் ஒன்றாகும். இருப்பினும், அமெரிக்கா பல ஆண்டுகளாக அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இது ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்கியுள்ளது என்றே சொல்லப்படுகிறது. இந்த அழுத்தத்தின் கீழ், மற்ற நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டன. இந்தத் தடைகள் காரணமாக, 2012 முதல் ஈரானிய ரியாலின் மதிப்பு சரிந்து வருகிறது.
நாட்டின் பணவீக்க விகிதம் இப்போது வரலாற்றில் மிக மோசமான நிலையில் உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம், பொருட்களின் விலை உயர்வு காரணமாக சாமானிய மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், ஈரானுக்குள் அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்துவது சட்டவிரோத குற்றமாக கருதப்படுகிறது. நாட்டில் டாலர் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் பயணம்… உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, நமது ரூபாய் பலவீனமாக இருக்கலாம். ஆனால், ஈரான் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில், நமது ரூபாய் மதிப்புமிக்க நாணயமாகும். எனவே, நீங்கள் குறைந்த பட்ஜெட்டில் வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், ஈரான் போன்ற நாடுகளை பட்டியலில் சேர்க்கலாம்.
