30 நாள்கள் சிறையில் இருந்த ஒருவர் இனி அரசு பதவி எதையும் வகிக்க முடியாது.
இதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது:
ஊழலுக்கு எதிராக தீவிர நிலைப்பாட்டை கொண்டவர் சர்தார் வல்லபபாய் படேல். அமைச்சர் மீது ஏதேனும் புகார் வரும்பட்சத்தில், அவர் யாராக இருந்தாலும், விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் புகாரில் உண்மையிருந்தால், அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என படேல் தெளிவாக தெரிவித்தார்.
சர்தார் வல்லபபாய் படேலின் விருப்பத்துக்கு, சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக மத்திய பாஜக அரசால் மரியாதை தரப்பட்டுள்ளது. இதை கருத்தில் காெண்டு, நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு, அரசியலமைப்பு சட்டத்தில் 130வது திருத்தத்தை செய்ய முடிவு செய்துள்ளது.
அதாவது, அரசு பதவி வகிக்கும் நபர் ஒருவர், 30 நாள்கள் சிறையில் இருக்கும்பட்சத்தில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதுதொடர்பான சட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
