மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தானாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்த தொடங்கி உள்ளது.
கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள சட்டக்கல்லூரியில் புதன்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.50 மணிக்குள் கல்லூரி வளாகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
மாணவியின் புகாரின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் அதே கல்லூரியின் முன்னாள் மாணவர் மறறும் அக்கல்லூரியின் ஊழியர் ஒருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த நிலையில் இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ளது தேசிய மகளிர் ஆணையம். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கவலை அளிப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணையை நடத்த கொல்கத்தா காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவருக்கு முழு மருத்துவ, உளவியல் மற்றும் சட்ட உதவியை வழங்க அறிவுறுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க மேற்கு வங்க காவல்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு ஒட்டுமொத்த நாட்டையை உலுக்கியது குறிப்பிடத்தக்கது.