ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை தொடர்வதாக கடற்படை தளபதி  தினேஷ் கே. திரிபாதி தெரிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய முப்படைகளும் மேற்கொண்டன. இதில் தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. எனினும் பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து, அந்நடவடிக்கையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்தது.

இந்நிலையில், மகாராஸ்டிரா மாநிலம், புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, ஆபரேசன் சிந்தூர் குறித்து கடற்படை தளபதி  தினேஷ் கே. திரிபாதி பேசியதாவது:

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை முழுவதும் நிறுத்தப்படவில்லை. அது இன்னும் தொடர்கிறது. ஆனால் எந்த வகையில் அது தொடர்கிறது என்ற தகவலை நான் பகிர முடியாது.

இந்திய கடற்படைக்கு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் தேவைப்படுகிறது. இதுகுறித்து நமது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பேசியுள்ளார். நமது கடற்படையில் உள்ள விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர்க் கப்பல் விரைவில் ஓய்வு பெறுகிறது. அதற்கு பதில் புதிய விமானந்தாங்கி கப்பல் இணைக்க வேண்டிய தேவை உள்ளது. இதேபோல், நமது கடற்படைக்கு மேலும் 2 விமானம் தாங்கி போர் கப்பல்கள் தேவைப்படுகின்றன.

அடுத்த தலைமுறை ராணுவ அதிகாரிகளான உங்களை ஒழுக்கமானவர்களாகவும், உறுதியானவர்களாகவும், இந்தியாவின் அமைதி, பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பவர்களாகவும் பார்க்கிறேன். போர் முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், தொழில்நுட்பம் எண்ணங்களின் வேகத்தை மாற்றுகிறது. எதிர்காலத்தில் தொழில்நுட்பம் நம்முடைய மிகப்பெரிய சொத்தாக இருக்கும்.

நமது பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல, அமைதிக்கான பாதை சக்தியின் வழியாகவே செல்கிறது. இன்றைய அணிவகுப்பு இந்த கல்வி மையத்தின் முன்மாதிரியான தரத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version