இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. இது வசதியாகவும், எளிதில் கிடைக்க கூடியதாகவும் இருப்பதால் பலர் தினமும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி குடிக்கின்றனர். ஆனால், இந்த வசதிக்காக நாம் ஒரு பெரிய விலையை கொடுக்கிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பல தீங்கு விளைவிக்கும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

இந்தநிலையில், டிசம்பர் 17, 2025 தேதியிட்ட உத்தரவில், பாட்டில்களில் குடிநீரை விற்கும் நிறுவனங்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் புதிய விதிமுறைகளை இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் FSSAI அறிவித்துள்ளது. அதன்படி, பாட்டில் மற்றும் மினரல் குடிநீர் நிறுவனங்கள், பி.ஐ.எஸ்., சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்பது நீக்கப்பட்டு உள்ளது. அதற்குப் பதிலாக, குடிநீர் நிறுவனங்கள், புதிய தரப்பரிசோதனை முறைகளை பின்பற்றுவது, வரும் ஜன.,1 முதல் கட்டாயமாகிறது.

இந்திய சந்தையில், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், குடிநீரின் தரம், பாதுகாப்பு மற்றும் அதில் உள்ள தாதுப்பொருட்கள் அளவை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நிர்ணயித்துள்ளது. இதன்படி, குடிநீரில் உள்ள நுண்கிருமிகள் தொடர்பான அளவீடுகளை, மாதம் ஒருமுறை கட்டாயம் பரிசோதிப்பதோடு, பிற அளவீடுகளை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். 

மேலும், உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், இரண்டு ஒழுங்குமுறை அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ் பெற தேவையில்லை என அரசின் உத்தரவுக்கு இணங்க, பி.ஐ.எஸ்., சான்றிதழ் பெறுவது நீக்கப்பட்டுள்ளது. இனி குடிநீர் நிறுவனங்கள், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம் மட்டும் பெற்றால் போதுமானது என்று FSSAI அறிவுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version