யு.பி.ஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக எழுந்த அச்சங்களுக்கு மத்தியில், வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மேலும், பெரும்பாலான வியாபாரிகளுக்கான பரிவர்த்தனைகளும் இலவசமாகவே தொடரும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
UPI மூலம் செய்யப்படும் தனிநபர்களுக்கு இடையிலான அனைத்துப் பரிவர்த்தனைகளும் முற்றிலும் இலவசமாகவே தொடரும். கடைகளில் பொருட்களை வாங்கும் சாதாரண வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித பரிவர்த்தனைக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
ஆகஸ்ட் 6-ஆம் தேதி மக்களவையில் ‘வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026’ நிறைவேற்றப்பட்டது. இது ‘பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007’ பிரிவு 10A-ல் திருத்தம் கொண்டுவர வழிவகை செய்கிறது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முழுமையான ஒப்புதல் பெற்ற பிறகு, NPCI தலைமையிலான ‘UPI மற்றும் சேவைகள் வழிகாட்டுதல் குழு’ MDR (Merchant Discount Rate) கட்டணம் குறித்து முடிவெடுக்கும்.
இந்த MDR கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது அனைவருக்கும் விதிக்கப்படாது. குறிப்பிட்ட வரம்பைத் தாண்டிய பெரிய அளவிலான வியாபார பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும், இந்தக் கட்டணம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான MDR கட்டணங்களை விட மிகக் குறைவாகவே இருக்கும் என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், அதன் உள்கட்டமைப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டியுள்ளது.
எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் தங்களது உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பில் அதிக முதலீடு செய்ய வேண்டி உள்ளது. மானியங்களை மட்டுமே நம்பியிருக்காமல், UPI சேவையைத் தற்சார்புடையதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்கான ஒரு சமநிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்காகவே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் காரணங்களைக் கூறியுள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “MDR கட்டணம் வியாபாரிகளுக்கு மட்டுமே விதிக்கப்படும் என்பது மக்களை தவறாக வழிநடத்தும் செயல். வியாபாரிகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டாலும், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கட்டணங்களைப் போலவே அவர்கள் பொருட்களின் விலையை உயர்த்தி, அந்தச் சுமையை வாடிக்கையாளர்கள் தலையில்தான் கட்டுவார்கள் என்பது தவிர்க்க முடியாதது. நடுத்தர வியாபாரிகள், சிறு மளிகைக் கடைகள் மற்றும் தெருவோர வியாபாரிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்” என்று அவர் விமர்சித்துள்ளார்.
