நீட் தேர்வு முறைகேடு, தேர்வுத்தாள் கசிவு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி  தலைமையில் டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியின்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

இந்த நிலையில், டெல்லியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ், டெல்லி காவல்துறை ஆணையருக்கு மூன்று மாத காலத்திற்கு தடுப்புக் காவல் அதிகாரங்களை பயன்படுத்த அனுமதி வழங்கி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், கைது செய்யப்படும் நபரை காரணம் கூறாமல் 3 மாத காலத்துக்கு சிறையில் அடைக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.

1980-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3(2)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரம் 2026 ஜூலை 19 முதல் அக்டோபர் 18 வரை அமலில் இருக்கும். பொது ஒழுங்கைப் பேணுதல், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட சூழல்களில், சட்டம்-ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் நபர்களை தடுப்புக் காவலில் வைக்க இந்த அதிகாரம் பயன்படுத்தப்படலாம்.

இதுகுறித்து டெல்லி காவல்துறை வெளியிட்ட விளக்கத்தில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிப்பது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதியாகும் என்றும், தற்போதைய உத்தரவு ஜூலை 7-ஆம் தேதியே பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த உத்தரவு டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் அல்லது சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை முன்னிட்டு வெளியிடப்பட்டதல்ல என்றும், இதனை போராட்டங்களுடன் தொடர்புபடுத்தி பரவும் தகவல்களை நம்பவோ பகிரவோ வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version