இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர்ச் சூழல் நிலவும் நிலையில், பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் நிதி அளிக்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்திருக்கிறது. நிதி தர வேண்டாம் என்று வலியுறுத்திய இந்தியா, வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இந்தியா உடனான போரில் மும்முரமாக இறங்கியுள்ளது பாகிஸ்தான். ஏற்கெனவே பொருளாதார ரீதியாக பலவீனமாக இருந்த பாகிஸ்தானுக்கு, இந்த நிலை மோசமான விளைவுகளைக் கொடுத்துள்ளது. சேதமடைந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளக் கூட கடன் வாங்க வேண்டிய நிலை வந்துள்ளது. அதனால்தான் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் கடன் கேட்டுள்ளது பாகிஸ்தான்.

வாக்கெடுப்பு – புறக்கணிப்பு, வெளிநடப்பு

ஆனால், பாகிஸ்தானுக்குக் கடன் வழங்கக் கூடாது என்று இந்தியா சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்குதல் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வாக்கெடுப்பு நடத்தியது. அக்கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானுக்குக் கடன் கொடுப்பது அசம்பாவிதங்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தது. மேலும் பாகிஸ்தான் மீது பலகட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியது. அத்துடன் வாக்கெடுப்பு கூட்டத்தைப் புறக்கணித்தது. எதிர்மறை வாக்களிக்க இடம் தரப்படாத காரணத்தால் வெளியேறியது.

இந்தியா வைத்த குற்றச்சாட்டுகள்

வாக்கெடுப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்தியா, பாகிஸ்தான் இதுவரை 28 ஆண்டுகள் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்கள் வாங்கியுள்ளதாகக் குறிப்பிட்டது. ஆனால், விதிக்கப்பட்ட நிபந்தனைகளைச் செயல்படுத்துவதில் மந்தமான போக்கையே கடைபிடித்து வந்திருக்கிறது என்றும் குற்றம்சாட்டியது. பெறப்படும் கடன்களைக் கொண்டு பொருளாதார நிலைமையைச் சீர் செய்ய பலமுறை அவகாசம் வழங்கப்பட்டபோதும் பாகிஸ்தான் தொடர்ந்து மெத்தனப் போக்கையே காட்டி வருவதையும் இந்தியா குறிப்பிட்டது. பொருளாதார செயல்பாடுகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் அதீத தலையீடும், கொள்கை முரண்களுமே அதற்குக் காரணம் என்றும் சுட்டிக் காட்டியது.

பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்குவது எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது ஆகும் என்று எச்சரித்தது. உலக நாடுகளுக்குத் தவறான வழிகாட்டுதல் ஆகிவிடும் என்று அறிவுறுத்தியது. பாகிஸ்தான் நிதியைத் தவறான வழியில் பயன்படுத்தக் கூடும் என்றும் இந்தியா கண்டித்தது

ஒப்புதலும் மகிழ்ச்சியும்

இந்தியாவின் அறிவுறுத்தல்களுக்குப் பிறகும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.8,542 கோடி ஆகும். இதுகுறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவின் ஆதிக்கத் தந்திரத்தை மீறி சர்வதேச நாணய நிதியம் உதவ முன் வந்திருப்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிப்பதாகக் கூறியுள்ளார். உலக வங்கியே கடன் தர மறுத்திருக்கும் நிலையில், சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்திருப்பது திடுக்கிட வைத்துள்ளது.

பாகிஸ்தானும் நிதிப் பிரச்னையும்

கடந்த ஆண்டு கணக்குப்படி பாகிஸ்தானுக்கு வெளிநாட்டுக் கடன்கள் மட்டும் 130 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து தொடர்ந்து 28 ஆண்டுகளாகக் கடன் பெற்று வருகிறது. பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 2.5% பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர். பணவீக்கம் 38% ஆக உயர்ந்திருக்கிறது. வறுமை விகிதம் கடந்தாண்டில் 40.5% ஆக உயர்ந்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை 9.7% ஆக உள்ளது. உலகளாவிய பசிக் குறியீட்டில் பாகிஸ்தான் 109-வது இடத்தில் உள்ளது. ஆக, பல காலமாகவே நிதிப் பிரச்னையுடனேயே இருந்து வருகிறது பாகிஸ்தான்.

பணத்தை வீணடிக்கும் பாகிஸ்தான்

பல்லாண்டுகளாக இப்படிப் பட்ட பொருளாதார நெருக்கடியுடன் பாகிஸ்தான் தவித்து வருகிறது. அதைச் சரி செய்யும் வகையில் ஒவ்வொருமுறை கடன் வழங்கும்போதும் பல்வேறு நிபந்தனைகள் பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டன. நாட்டில் வரி வசூலிப்பை விரிவுப்படுத்த வேண்டும், கையாள முடியாத அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்க வேண்டும். நிலைத்தன்மை அற்ற மானியங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அவற்றை முழுவதுமாகச் செயல்படுத்தவில்லை. இதனால் எரிபொருள், மின்சாரத் தட்டுப்பாடு நீண்ட காலமாக அந்நாட்டில் நிலவி வருகிறது.

ஏற்கெனவே உலக வங்கி வைத்த நிபந்தனைகளைச் செயல்படுத்த தவறியதால் 500 மில்லியன் கடன் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் புதிதாக கடன் வழங்கும் திட்டத்தையும் வரும் ஜுன் மாதம் வரை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

– விவேக்பாரதி

Share.
Leave A Reply

Exit mobile version