பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டு, பயங்கரவாதிகளைத் தன் மண்ணில் வளர்த்து வந்தால், அவர்கள் உலக வரைபடத்தில் (பூகோளத்தில்) நீடிக்க வேண்டுமா அல்லது வரலாறாக மாற வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்று இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
டெல்லி மானேக்சா மையத்தில் நடைபெற்ற ‘யூனிஃபார்ம் அன்வெயில்டு’ (Uniform Unveiled) கலந்துரையாடல் நிகழ்வில் ராணுவ தளபதி கலந்து கொண்டார். அப்போது, கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) போன்றதொரு சூழல் மீண்டும் ஏற்பட்டால் இந்திய ராணுவம் எவ்வாறு பதிலடி கொடுக்கும் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்துப் பேசிய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, நான் ஏற்கனவே கூறியதைத்தான் இப்போதும் சொல்கிறேன். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளைத் தன் நாட்டில் தங்க வைத்து, இந்தியாவிற்கு எதிராகச் சதி வேலைகளில் ஈடுபட்டால், பாகிஸ்தான் உலக வரைபடத்தில் நீடிக்க விரும்புகிறதா? அல்லது அப்படி ஒரு நாடு இருந்ததாக வரலாற்றில் நினைவுகூரப்பட விரும்புகிறதா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள் என கடுமையாக எச்சரிக்கை செய்தார்.
கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பகல்காம் பகுதியில் நடந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராகத் தாக்குதல் நடத்த முயன்றது. அதற்கு இந்தியப் படைகள் கொடுத்த கடுமையான எதிரடித் தாக்குதல்களும் இந்த ஆபரேஷனின் கீழ் தொடர்ந்தன. அணு ஆயுதம் கொண்ட இரு அண்டை நாடுகளுக்கு இடையே சுமார் 88 மணி நேரம் நீடித்த இந்த கடுமையான ராணுவ மோதல், கடந்த ஆண்டு மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சுமுக உடன்பாட்டிற்குப் பின்பே முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
