பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வருகிற 4-ந் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் 3-வது முறையாக பாரதிய ஜனதா ஆட்சியில் அமர்ந்தும், 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இதையொட்டி வரும் 4-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளதாம். பாகிஸ்தான் உடனான போருக்குப் பிறகு மத்திய அமைச்சர்கள் அனைவருடனும் பிரதமர் சந்திக்க இருப்பது இதுவே முதல்முறையாகும்.
அதேபோன்று ஒவ்வொரு அமைச்சரும் தத்தமது துறைசார் தகவல்கள், திட்டப்பணிகள், நிதி ஒதுக்கீடுகள், சட்ட சிக்கல்கள் போன்ற தகவல்களை எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனராம். ஓராண்டில் அறிவித்தது என்ன? முடிவுற்றவை என்ன? கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வரும் பணிகள் என்னென்ன? எதிர்கட்சிகள் எவற்றையெல்லாம் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகின்றனர்? அதற்குரிய பதில்கள் என்ன? என்று விரிவான ஆலோசனை கூட்டமாக இதனை பிரதமர் நடத்த உள்ளாராம்.
அதேபோன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அதற்கான தரவுகளை, மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் வழங்குவார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.