நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை வைத்து விளம்பரம் செய்து போலி கிரிப்டோ கரன்ஸி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் இருவரை புதுச்சேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் தற்போது நிறுவனத்தின் பங்கு இயகுநர் ஒருவரை சைபர் க்ரைம் போலீசார் கோவையில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்த பின்னர், நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (66). ராணுவ வீரரான அவர் ஓய்வு பெற்ற பின் பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் பணிபுரிந்து ஒய்வு பெற்றார். இவர் தனக்கு கிடைத்த ஒய்வூதியத்தை கிர்ப்டோ கரண்சி மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்தார். அதன் படி கடந்த 2022 ஆம் ஆண்டு இணையத்தில் அஷ்பே என்கிற கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை உண்மை என்று நம்பிய அவர் அந்த லிங்கை பின்பற்றி அதில் 10 லட்சம் முதலீடு செய்தார். அது மட்டுமின்றி தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என எட்டு பேரை இதில் சேர்த்து அனைவரும் ரூ. 2.5 கோடி அளவில் பணம் முதலீடு செய்யதனர். இந்த நிறுவனமும் கோவை மற்றும் மகாபலிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நடிகை தமன்னா, காஜல் அகர்வாலை வைத்து விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தினர்.

நிகழ்ச்சிகளில் அசோகன் மற்றும் அவருடன் முதலீடு செய்த அவரது நண்பர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முதலீட்டாளர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இதில் அசோகன் கார் வேண்டாம் என கூறி ரூ. 8 லட்சம் பணமாக பெற்று கொண்டுள்ளார். தொடர்ந்து சிறிது நாளில் அசோகன் வங்கி கணக்கில் ரூ. 9 கோடி இருப்பது தெரியவந்தது. இதனை அவர் தனது வேறு வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார் ஆனால் முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தன்னுடன் பேசி வந்த எண்ணை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது எதிர் முனையில் போஃனை எடுக்கவில்லை. எனவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கோயம்புத்தூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் சைபர் க்ரைம் போலீசார் கோயம்புத்தூர் விரைந்து சென்று நித்தீஷ் ஜெயின் (36), அரவிந்த் குமார் (40), தாமோதரன் உள்ளிட்ட 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்து மூவரையும் புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் கொடுத்த வாக்குமூலம் படி இவ்வழக்கில் தொடர்புடைய ஆஸ்பே கிரோப்ட்டோ கரன்ஸி நிறுவன இயக்குனர்களான கோயம்புத்தூரை சேர்ந்த சையது உஸ்மான், சந்தானம், இம்ரான்பாஷா, ஆகியோரை சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது பாபு @ சையது உஸ்மானை கைது செய்து அவரிடமிருந்து ஒரு ஆடி சொகுசு காரை பறிமுதல் செய்து அவரை நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சிலரையும் போலீசார் தேடி வரும் நிலையில் அவர்களையும் கைது செய்த பின்பு நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் தமன்னாவிடம் விசாரணை நடத்த உள்ளதாக சைபர் க்ரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
