புதுச்சேரி அரசியலில் மற்றொரு அதிரடி திருப்பமாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 3 தொகுதிகளில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கான வேட்பாளர் பட்டியல் இன்று பிற்பகல் 3 மணி அளவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு எங்களை அழைக்கவில்லை என்பது கற்பனையானது. ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை அறிவிப்பு வெளியாகும் என்றார்,
ஏற்கனவே புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. இன்று வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால், இரு கட்சிகளுமே ஒரு முடிவுக்கு வராமல் 30 தொகுதிகளிலும் தனித்தனியாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்த இக்கட்டான சூழலில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவும் தனது பங்கிற்கு 3 தொகுதிகளைக் கேட்பது திமுக தலைமைக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், புதுச்சேரியிலும் அதே கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்குள்ள அரசியல் சூழல் மற்றும் தொகுதி ஒதுக்கீட்டில் நிலவும் குளறுபடிகள் காரணமாக பிரேமலதா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். காங்கிரஸ், திமுக என அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே களம் காண்பதால், புதுச்சேரி தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல முனை போட்டியைச் சந்திக்கத் தயாராகிவிட்டது.

