‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அனைத்து நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும், புயல் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதியில் மையம் கொண்ட ‘டித்வா’ புயல் இலங்கையில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர் கனமழையால் இலங்கையில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அம்பாறை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே மழை வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், ‘டித்வா’ புயலால் பாதிப்புகளை சந்தித்துள்ள இலங்கைக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சாகர் பந்து’ மூலம் இந்தியாவில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
கனமழை, வெள்ளம், நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
