தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவைகள், 18 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த 7-ம் தேதி அன்று தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள், அந்த மாநில போக்குவரத்து துறையால் சிறைபிடிக்கப்பட்டு 70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று கர்நாடக மாநில போக்குவரத்து துறையும் 60க்கும் மேற்பட்ட தமிழ்நாடு ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்து, மொத்தம் ரூ.1.15 கோடி வரை வசூலித்துள்ளது.
இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம், 2021 மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மீட்டின்படி தமிழ்நாட்டில் இன்று வரை அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கிறார்கள். எனவே நாங்களும் வசூலிக்கிறோம் என தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு இயக்கப்படும் 230 ஆம்னி பேருந்துகளை கடந்த 21 நாட்களாக இயக்காமல் நிறுத்தி வைத்திருந்தோம்.
கடந்தத நவம்பர் 10 ஆம் தேதியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகளும் இயக்காமல் கடந்த 18 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டிற்கு தமிழ்நாடு 1 லட்சத்து 50 ஆயிரம் சாலை வரி விதித்தது. AITP 90 ஆயிரம் மற்றும் கேரளா அல்லது கர்நாடகா சாலை வரி சுமாராக 2 லட்சம், ஆக மொத்தம் காலாண்டுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தியும் பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும், போக்குவரத்து ஆணையரையும் சந்தித்து, கோரிக்கை வைத்தோம்.
மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் 1,350க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்ததால், தினசரி 25,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்படைந்து, உரிமையாளர்களுக்கு தினசரி சுமார் ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 21 நாட்களில் மொத்தம் ரூ.84 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்திருந்தனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. தற்போதும் போக்குவரத்து துறை ஆணையரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். ஆணையரும், போக்குவரத்துத்துறை அமைச்சரும் முதலமைச்சர் ஆலோசனை பெற்று நல்ல ஒரு முடிவை ஏற்படுத்தி தருகிறோம் என்று கூறியுள்ளனர்.
அரசு இதனை பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில் பயணிகள் நலனையும், ஐயப்பன் கோயில் பக்தர்கள் நலனையும் கருத்தில் கொண்டு, வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளை இயக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, வெளிமாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் இன்று (நவ.28) மாலை முதல் வழக்கம்போல் இயக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
