கோவாவில் 77 அடி உயர பிரம்மாண்ட வெண்கல ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தெற்கு கோவாவின் பர்தகாலி பகுதியில் அமைந்து உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில், பிரம்மாண்ட 77 அடி உயர வெண்கல ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. மடத்தின் 550வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஆசியாவிலேயே உயரமான ராமர் சிலையை திறந்து வைத்தார். மடத்தால் உருவாக்கப்பட்ட ராமாயண பூங்காவையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவா ஆளுநர் அசோக் கஜபதி ராஜூ மற்றும் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ராமர் சிலை திறப்பு விழாவையொட்டி பத்ரிநாத்தில் இருந்து கோவா வரை பிரம்மாண்ட ஸ்ரீராம யாத்திரை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீராமரை தரிசித்தனர்.

நொய்டாவைச் சேர்ந்த சிற்பி ராம் சுதரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ராமர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பு ராம் சுதர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தின் 550வது ஆண்டு விழாவையொட்டி நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,  77 அடி உயர ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளநிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் காவிக்கொடி ஏற்றி வைக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்ததாக  குறிப்பிட்டார். அயோத்தியில் ராமர் கோயிலின் மறுசீரமைப்பு, காசி விஸ்வநாதர் கோயிலின் மறுசீரமைப்பு ஆகியவை ஆன்மிக பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதாக உள்ளது என்றார்.  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் போது தான் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவு நனவாகும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதற்காக 9 கோரிக்கைகளை முன் வைப்பதாக தெரிவித்தார்.

தண்ணீரை சேமிக்க வேண்டும், மரங்கள் நட வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், உள்நாட்டு பொருட்களை பயன்படுத்த வேண்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளைப் புரிந்து கொள்ள பாடுபட வேண்டும், இயற்கை விவசாயத்தை வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும், விளையாட்டுக்கள் மற்றும் யோகா பயிற்சியில் ஈடுபட வேண்டும், ஏழைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என மக்களுக்கு 9 கோரிக்கைகளை பிரதமர் முன்வைத்தார். வளர்ச்சி அடைந்த பாரதம் நோக்கிய பயணத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version