அராஜகம் செய்பவர்களை அழிக்க வேண்டியதன் அவசியத்தை கீதை நமக்கு கற்பிப்பதாகவும், மக்களை பாதுகாக்க புதிய இந்தியா தயங்காது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயிலில் பிரதமர் மோடி இன்று (நவ. 28) வழிபாடு நடத்தினார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்நாடகா வந்த பிரதமர் மோடி, உடுப்பி நகரில் சாலை வலம் சென்று மக்களை சந்தித்தார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் பிரதமர் மோடிக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், உடுப்பி நகரில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து மடத்தில் நடந்த லட்சகாண்ட கீதை பாராயண நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார். பின்னர், கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுவர்ண தீர்த்த மண்டபத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ஸ்ரீபுட்டிகே மடத்தின் தலைவர் ஸ்ரீசுகுணேந்திரதீர்த்த சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சில நாட்களுக்கு முன்பு கீதை பிறந்த குருசேத்திரத்தின் புனித பூமியில் இருந்ததாகவும், தற்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோரின் ஆசிர்வதிக்கப்பட்ட பூமியில் இருப்பது மிகுந்த திருப்தியை தருவதாகவும் தெரிவித்தார். அராஜகம் செய்பவர்களை அழிக்க வேண்டியதன் அவசியத்தை கீதை நமக்கு கற்பிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற கீதையின் செய்தியே பல்வேறு திட்டங்களுக்கு அடிப்படையாகும் என்றார். பயங்கரவாத தாக்குதலின் போது முந்தைய அரசுகள் செயல்படாமல் இருந்ததாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, புதிய இந்தியா தனது மக்களைப் பாதுகாக்க தயங்காது என்றும் யாருக்கும் தலைவணங்காது என்றும் தெரிவித்தார்.
