அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அதனைத் தடுத்து நிலைநிறுத்தவும், வங்கித்துறையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி, 5 பில்லியன் டாலர் (சுமார் ₹48,000 கோடிக்கும் மேல்) மதிப்பிலான டாலர்-ரூபாய் மாற்று ஏலத்தை (USD/INR Buy-Sell Swap Auction) நடத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இந்த ஏல நடைமுறை வரும் மே 26ம் தேதி ஒரு மணி நேர விண்டோவில் (முற்பகல் 10:30 முதல் 11:30 மணி வரை) நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த டாலர்-ரூபாய் மாற்று ஒப்பந்தம் ஒரு எளிய ‘வாங்குதல்-விற்றல்’   முறைப்படி இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வணிக வங்கிகள் தங்களிடம் உள்ள அமெரிக்க டாலர்களை ரிசர்வ் வங்கிக்கு  தற்போதைய சந்தை மதிப்பில் விற்கும். இதற்குப் பதிலாக, அந்த டாலர்களின் மதிப்புக்கான இந்திய ரூபாயை ஆர்பிஐ சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உடனடியாக வழங்கும். அதேநேரம் சரியாக 3 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு (மே 29, 2029 அன்று), வங்கிகள் அதே அளவு டாலர்களை ரிசர்வ் வங்கியிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பிரீமியம் தொகையுடன் மீண்டும் விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும்.

வங்கிகளிடமிருந்து டாலர்களை வாங்குவதன் மூலம் ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி இருப்பு கணிசமாக உயரும். சந்தையில் டாலர்களை விற்பதன் மூலம் ரிசர்வ் வங்கி தொடர்ந்து பணத்தை உறிஞ்சி வந்ததால் வங்கிகளில் ஏற்பட்ட ரூபாய் தட்டுப்பாடு நீங்கி, நீண்ட கால பணப்புழக்கம் அதிகரிக்கும். சந்தையில் இந்திய ரூபாய்க்கான தட்டுப்பாடு குறைந்து, போதுமான லிக்விடிட்டி கிடைப்பதால், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடைவது கட்டுப்படுத்தப்பட்டு ஸ்திரத்தன்மை அடையும்.

அண்மைக்காலமாக சர்வதேச அரசியல் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருவது போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், ரிசர்வ் வங்கியின் இந்த 3 ஆண்டு கால டாலர் மாற்று ஏல நடவடிக்கை, நாணயச் சந்தையை மீட்டெடுக்க உதவும் ஒரு முக்கிய நிதியியல் உத்தியாகப் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version