இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் குறைந்தாலும் கூட, போர் இன்னும் முற்றிலும் நிறுத்தப்படவில்லை. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைக் கோடு அருகேயுள்ள பகுதிகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தது. அதனை இந்திய ராணுவம் முறியடித்தது. இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
அதன்படிப்படையில் இரு நாடுகளும் போரை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டதாக டிரம்ப் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்திய ராணுவ அதிகாரியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதலை நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு, கடந்த 10-ம் தேதி மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் மீண்உம் அடாவடியாக டிரோன்களை ஏவி தாக்குதலை தொடர்ந்தது. அதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடியும் கொடுக்கப்பட்டு, பின் எல்லையில் அமைதி திரும்பியது.
4 நாட்களாக தொடர்ந்த தாக்குதல் ஓய்ந்ததால், காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர பகுதிகள் நேற்று முதல் (11.05.2025) இயல்பு நிலைக்கு திரும்பியது. மின்விநியோகம் மீண்டும் வழங்கப்பட்ட நிலையில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வாகன போக்குவரத்தும் வழக்கம் போல் நடைபெற தொடங்கியுள்ளது. இருப்பினும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான சுமூக பேச்சுவார்த்தையாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குநர்கள் இடையே இன்று (12.05.2025) பேச்சுவார்த்தை நடக்கிறது.
முன்னதாக பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் பீரங்கிகள், டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்திய போது, அதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்திய தாக்குதலால் நிலைகுலைந்து போன பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடம் குறித்து சேகரிக்கப்பட்ட உளவுத் துறை தகவலின் அடிப்படையில் ”ஆபரேஷன் சிந்தூர்” வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இதனால் உளவுத்துறை சேகரிக்கும் சக்தியை மேலும் வலுப்படுத்த ஒரு பெரிய திட்டத்தை இந்திய அரசு வகுத்துள்ளது. இதற்கென இந்திய அரசு அதன் உளவு செயற்கைக் கோள் அமைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக சுமார் 3 பில்லியன் டாலர்கள் அதாவது ரூ.22,500 கோடி செலவாகும் எனவும், இது விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு திட்டம் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.