விலை உயர்த்தப்பட்ட வெறும் நான்கே நாட்களில், மோடி அரசு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. தன் தோல்விகளை மறைத்து, அதன் பாரத்தை மக்கள் மீது சுமத்தும் முயற்சியில் இந்த அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், “சாமானிய மக்களைக் கொள்ளையடித்து, அமெரிக்காவில் அதானிக்கு தடையில்லாச் சலுகை வழங்குவதுதான் மோடியின் ‘காம்ப்ரமைஸ் மாடல்’ என்று விமர்சித்துள்ள அவர், உலகிற்கே விஸ்வகுரு என்று போலியான பெருமை பேசும் பிரதமர் மோடி, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான “அனுமதிக்கு” காலக்கெடுவை ஒரு மாதம் நீட்டிக்குமாறு அமெரிக்காவிடம் கெஞ்சியுள்ளார்.
இப்படிச் செய்யும் ஒவ்வொரு முறையும், 140 கோடி இந்தியர்களின் பெருமைக்கு அவர் கங்கம் விளைவிக்கிறார். இதற்கு முன்பு எந்தவொரு இந்திய அரசாங்கமும் இந்த அளவிற்குத் தாழ்ந்து போனதில்லை. மத்திய அரசின் கூற்றுப்படி, எண்ணெய் வாங்க அனுமதி கிடைத்துவிட்டது என்றால், பிறகு ஏன் பெட்ரோல்-டீசல் விலை உயர்வின் பாரத்தை சாமானிய மக்கள் மீது சுமத்த வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் நெருக்கடி ஏற்பட்டபோது, அவர்கள் தேர்தல் பணிகளில் பிஸியாக இருந்தனர். மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்க சாதுரியமான வார்த்தைகளால் திட்டங்களை வகுத்தனர். அதே நேரத்தில், தங்களுக்கு நெருக்கமான நண்பரையும் (அதானி) பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றியுள்ளனர்.
வெளிநாடுகளில் ஸ்பான்சர் செய்யப்பட்ட பிஆர் (PR) நிகழ்ச்சிகளை நடத்துவதால் மட்டும் யாரும் ‘விஸ்வகுரு’ ஆகிவிட முடியாது. நாட்டின் பிரதமராக மக்களுக்குப் பதில் சொல்லும் கடமை உங்களுக்கு உள்ளது.
உண்மையான கேள்விகளிலிருந்து ஓடி ஒளியாதீர்கள்… நீங்கள் மாம்பழங்களை எப்படிக் கடித்துச் சாப்பிடுகிறீர்கள் என்பதிலோ, அல்லது எந்தச் சத்து பானத்தைக் குடிக்கிறீர்கள் என்பதிலோ மக்களுக்குச் சிறிதும் ஆர்வமில்லை.
தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க நீங்கள் உண்மையில் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் பதிலளித்தால் மட்டுமே, மக்கள் உங்களை அவர்களின் உண்மையான “பிரதம சேவகர்” என்று அழைப்பார்கள்; இல்லையெனில், நீங்கள் வெறும் “பிரச்சாரகர்” என்ற நிலையிலேயே நின்றுவிடுவீர்கள் என்று தனது பதிவில் கடுமையாகத் சாடியுள்ளார்.
