புதுச்சேரி அரசியல் களத்தில் இன்று (மார்ச் 23) மிகப்பெரிய அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சங்கர், தனது முகநூல் பக்கத்தில் “புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டி” என்று பதிவிட்டுள்ளது கூட்டணி வட்டாரங்களில் இடியை இறக்கியுள்ளது. வேட்புமனுத் தாக்கலுக்கு இன்றுதான் கடைசி நாள் என்பதால், இந்தத் திடீர் அறிவிப்பு காங்கிரஸ்-திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதையே உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தொகுதிப் பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்து வந்தது. காங்கிரஸ் தரப்பில் 16 முதல் 18 தொகுதிகள் வரை கோரப்பட்ட நிலையில், திமுக சமமாக 15 இடங்களை ஒதுக்க வலியுறுத்தி வந்தது. நேற்று வரை இரு கட்சிகளும் 15-15 என்ற விகிதத்தில் உடன்பாடு எட்டியதாகத் தகவல்கள் வெளியான நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டால் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் வேட்பாளர் பட்டியலில் இடம் எதிர்பார்த்திருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

நேற்று தவெக தலைவர் விஜய் தனது 30 வேட்பாளர்களையும் அறிவித்து புதுச்சேரி அரசியலில் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், இன்று காங்கிரஸின் இந்தத் தனித்துப் போட்டி அறிவிப்பு தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் அவசர அவசரமாக மனுத் தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றனர். இந்தத் திடீர் மாற்றத்தால் புதுச்சேரியில் மும்முனை அல்லது நான்கு முனைப் போட்டி உருவாவது உறுதியாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version