தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்துவது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டாலோ அல்லது கருத்தடை செய்யப்பட்டாலோ, அவற்றை மீண்டும் அதே பகுதிகளில் கொண்டு போய் விடக்கூடாது என்ற முந்தைய உத்தரவில் திருத்தங்கள் செய்யக் கோரிய மனுக்களை நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது.

நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்துக் கடுமையான கவலைகளையும் எச்சரிக்கைகளையும் பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தெருநாய் கடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, 2026-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2 லட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தத் தாக்குதல்களால் சிறுவர்களும், முதியவர்களுமே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள் மட்டுமின்றி, நாட்டின் மிக பரபரப்பான விமான நிலைய வளாகங்களில் கூட நாய் கடி சம்பவங்கள் நடப்பது அதிகாரிகளின் அலட்சியத்தைக் காட்டுகிறது. சமீபத்தில் சூரத் நகரில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டுப் பயணி ஒருவர் தெருநாயால் கடிக்கப்பட்ட சம்பவத்தையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

விலங்குகள் நல வாரியத்தின் விதிமுறைகளையும், நாய் கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்களையும் மாநில அரசுகள் முறையாகச் செயல்படுத்தவில்லை என்பதையே இந்தத் தொடர் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.”

பொது இடங்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து, அவற்றுக்கென தனியாக உருவாக்கப்படும் மறுவாழ்வு மையங்களில் அடைக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விலங்குகள் நல மையங்கள் போதிய பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் நாய்கள் அலைந்து திரிவதைத் தடுக்க, மாநில அரசுகளுடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI) தொடர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த உத்தரவுகளையும், முந்தைய வழிகாட்டுதல்களையும் செயல்படுத்தத் தவறும் அதிகாரிகள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version