மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் லேசான அதிர்வுகள் காரணமாகச் சில பகுதிகளில் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர்கள் உறுதிப்படுத்தினர்.

தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) தகவலின்படி, சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் நாசிக்கில் 4.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 5.33 மணியளவில் 3.3 ரிக்டர் அளவில் மற்றொரு லேசான அதிர்வு பதிவானது. மகாராஷ்டிரா-குஜராத் எல்லைக்கு அருகில் உள்ள ஹட்காட் மலைத்தொடருக்குப் பகுதியில் உள்ள பன்வாட் பகுதியில், பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் இந்த நிலஅதிர்வு மையம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாசிக் நகரம், சுர்கானா, கல்வான், தேவ்லா, சந்த்வாத், பெத், திண்டோரி மற்றும் நிபாத் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். சுர்கானா தாலுகாவில் உள்ள பதாத் மற்றும் திண்டோரி தாலுகாவில் உள்ள நனாஷி ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அப்பகுதியில் உள்ள அணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கு எந்தவித சேதமும் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார். அதேவேளையில், அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version