மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான ஹைதராபாத் இல்லத்தைச் சொத்து வரி பாக்கி காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து முடக்கியுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் (யுசுஃப்குடா பகுதி) மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான நான்கு மாடி பங்களா ஒன்று உள்ளது. இந்த இல்லத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள வரி மற்றும் அபராத வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.1.60 கோடி பாக்கி உள்ளதாக ஹைதராபாத் மாநகராட்சி (GHMC) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு கடந்த பிப்ரவரி மாதமே நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அதற்கான உரியப் பதில் அளிக்கப்படாததால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் நேற்று (மார்ச் 30) அந்த இல்லத்திற்கு நேரில் சென்று சீல் வைத்தனர். தற்போது அமலில் உள்ள ‘ஒரே முறை தீர்வு’ (One-Time Settlement – OTS) திட்டத்தின் கீழ் வட்டிச் சலுகை போக, சுமார் ரூ. 82.91 லட்சம் செலுத்தினால் சீல் அகற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு காலத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு இந்த இல்லம் வாடகைக்கு விடப்பட்டிருந்ததும், அப்போது நிலுவையில் இருந்த வரிகள் காலப்போக்கில் அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version