இந்திய விமானப் படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானம், துபாயில் விமான கண்காட்சியில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துபாயில் விமான கண்காட்சி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் பங்கேற்றன. இந்தியாவின் தரப்பில், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் தயாரித்த இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் இடம் பெற்றது. வானில் சாகச நிகழ்வுக்காக தேஜஸ் விமானம் வட்டமடித்தும், தலைகீழாக சுற்றியும் பறந்து, பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருந்தது. வானில் பறந்து சாகசம் நிகழ்த்திருக் கொண்டிருக்கும் விமானங்களை கூடியிருந்த பார்வையாளர்கள் பலரும் தங்கள் செல்போன்களில் படம் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம், வானில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இதனை சற்றும் எதிர்பார்க்காதநிலையில், அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். விமானம் விபத்துக்குள்ளான காட்சிகள் அங்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பலரின் செல்போன்களில் பதிவானது.
விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறிய போது, அங்கு பெரும் புகை மண்டலம் எழுந்தது. போர் விமானம் விபத்துக்குள்ளானதையும், அதில் விமானி உயிரிழந்ததையும் இந்திய விமானப்படை உறுதி செய்தது. விமானியின் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள இந்திய விமானப்படை, துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் இந்திய விமானப் படை துணை நிற்பதாக தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்றும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.
இதனிடையே தேஜஸ் போர் விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலபிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள நக்ரோட்டாவைச் சேர்ந்த விங் கமாண்டர் நமன் சியால் என்பது தெரியவந்துள்ளது. விங் கமாண்டர் நமன் சியால் மறைவுக்கு இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். துணிச்சலான விங் கமாண்டர் நமன் சியால் உயிரிழந்த செய்தி மிகவும் மன வேதனையையும், ஆன்மாவை நொறுக்குவதாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நமது தேசம் ஒரு துணிச்சலான, கடமை உணர்வு கொண்ட விமானியை இழந்துவிட்டதாகவும் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
விமான விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் நமன் சியால் ஐதராபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் பணியாற்றி உள்ளார். அவரது மனைவியும் இந்திய விமானப்படையில் மூத்த அதிகாரியாக உள்ளார். நமன் சியால் தந்தையும், இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
