SIR-க்கு எதிரான வழக்குகளில் இறுதி தீர்ப்பு ஜனவரி மாதம் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிஹாரை தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிர தேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டதை அடுத்து, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இருப்பினும், மாநிலங்களில் SIR பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், SIR-க்கு எதிராக தமிழ்நாடு, புதுச்சேரி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, SIR தொடர்பாக புதிய வழக்குகள் அனுமதிக்கப்படாது என்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொடர்பான வழக்குகளை வரும் 17ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
மேலும், SIR-க்கு எதிராக மற்ற மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளும் ஒவ்வொரு தேதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அனைத்து வழக்குகளின் வாதங்களை முடித்துவிட்டு ஜனவரி மாதத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.
