எதிர்காலப் போர்கள் முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்பம் மற்றும் வியூகங்களைக் கொண்டிருக்கும் என்று முப்படைத் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அஹில்யா நகர் மாவட்டம் ஷீரடியில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆலை திறப்பு விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பிறகு பேசிய முப்படைத் தளபதி அனில் சவுகான், எதிர்காலப் போர்கள் வெறும் மனித சக்தியை மட்டுமே நம்பி இருக்காது என்றும் மாறாக, நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI), ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவையே போர்க்களத்தின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என்றும் முப்படைத் தளபதி அனில் சவுகான் குறிப்பிட்டார்.
தேசப் பாதுகாப்பு என்பது வீரர்கள், மாலுமிகள், விமானப் படையினர் ஆகியோரின் துணிச்சல் சார்ந்ததாக மட்டும் இருக்காது என்றும் தொழில்நுட்பம், தொழில் திறன் மற்றும் உற்பத்தி பலம், புத்தாக்கத் திறன் ஆகியவை தொடர்பானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
உலக நாடுகளின் தற்போதைய ராணுவ உத்திகள் மாறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, இந்திய ராணுவமும் காலத்திற்கேற்ப நவீன ஆயுதங்கள் மற்றும் தற்காப்பு தொழில்நுட்பங்களில் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் முப்படைத் தளபதி அனில் சவுகான் வலியுறுத்தினார். தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செயல்படுவதன் மூலமே இத்தகைய நவீன சவால்களைச் சந்திக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
