தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் ஆலைக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்றும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை, ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய அணுசக்தி நிலையமாக மாற்றுவோம்’ எனவும் அதிபர் புதின் உறுதியளித்துள்ளார்.
அரசு முறை பயணமாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட்டார். பிரதமர் மோடி – புடின் சந்திப்பில், இந்தியா – ரஷ்யா இடையிலான வர்த்தகம், ராணுவத் தளவாடம், உக்ரைன் போர் உள்ளிட்ட பல விவகாரங்கள் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள மூன்றாவது அணு உலையின் முதற்கட்ட ஏற்றுதலுக்கான அணு எரிபொருளின் முதல் தொகுதியையும், ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் (Rosatom) வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய புதின், ‘கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் அணு உலைகள் கட்டப்பட்டு வருவதையும், அவற்றை விரைந்து முடிக்க ரஷ்யா எவ்வாறு உதவுகிறது,’ என்பது பற்றியும் பேசினார்.
“கூடங்குளத்தில் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கட்டுவதற்கான ஒரு முதன்மைத் திட்டத்தை நாங்கள் நடத்தி வருகிறோம். ஆறு அணு உலைகளில் இரண்டு ஏற்கனவே மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் நான்கு கட்டுமானத்தில் உள்ளன. இந்த அணு உலையை முழு திறனுக்குக் கொண்டுவருவது இந்தியாவின் எரிசக்தித் தேவைகளுக்கு ஈர்க்கக்கூடிய பங்களிப்பை வழங்கும். தொழில்கள் மற்றும் வீடுகளுக்கு மலிவான மற்றும் சுத்தமான மின்சாரத்தை வழங்கும்.”
இந்த அணுமின் நிலையத்தில், ஆறு அணு உலைகள் உள்ளன. தற்போது இரண்டு மட்டுமே பயன்பாட்டில் உள்ளன; இதில் ஒன்று, 2013லும், மற்றொன்று 2016லும் துவங்கப்பட்டன. மீதமுள்ள, நான்கு அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஒரு உலை, 1,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இந்த இரண்டு அணு உலைகளும், 2,000 மெகாவாட் உற்பத்தி செய்கின்றன. ஆறு அணு உலைகளும் இயங்கினால், 6,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இப்படி, இந்த மின் நிலையம் முழுமையாக இயங்கினால், இந்தியாவின் மின் உற்பத்தி எங்கேயோ சென்று விடும்; தமிழகத்தில் மின் வெட்டு என்பதே இருக்காது.
‘மூன்றாவது அணு உலைக்கான எரிபொருள், புடின் இந்தியா வருவதற்கு முன் இங்கு வந்து சேர்ந்துவிட்டது. விரைவில், இந்த மூன்றாவது அணு உலை பயன்பாட்டிற்கு வரும்’ என சொல்லப்படுகிறது.
