கேஸ் சிலிண்டர் விலை உயர்வு விவகாரத்தில் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் எனப் பிரதமர் மோடி கூறி வரும் நிலையில், உண்மையில் பிரதமர்தான் வேறு சில விவகாரங்களால் கடும் பீதியில் இருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிலிண்டர் விலையேற்றத்தால் மக்கள் அவதிப்படுவதைப் பற்றி கவலைப்படாமல், பிரதமர் தன் மீதான புகார்களை மறைப்பதிலேயே குறியாக இருப்பதாகச் சாடினார். இந்த அச்சத்தின் காரணமாகவே பிரதமர் நாடாளுமன்றப் பக்கமே வருவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடியின் இந்தத் தலைமறைவுப் போக்கிற்குப் பின்னால் அதானி விவகாரம் மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் புகார்கள் இருப்பதாக ராகுல் காந்தி மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த இரண்டு விவகாரங்களிலும் உள்ள உண்மைகள் வெளிவந்துவிடுமோ என்ற பீதியிலேயே பிரதமர் மோடி நாடாளுமன்ற விவாதங்களைத் தவிர்த்து வருவதாக அவர் குறிப்பிட்டார். சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்குகள் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டிய கடமை பிரதமருக்கு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

முக்கியமான மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருந்தும், ஆளுங்கட்சி வேண்டுமென்றே விவாதங்களைத் தள்ளிப்போடுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். குறிப்பாக, அதானி குழுமத்தின் முறைகேடுகள் மற்றும் எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க அஞ்சி, பிரதமர் மோடி ஜனநாயகத்தின் உயரிய இடமான நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பதாக அவர் சாடினார். ஒரு முழுமையான விசாரணை மற்றும் விவாதம் நடக்கும் வரை இந்த விவகாரங்களை விடப்போவதில்லை என்றும் ராகுல் காந்தி  உறுதிபடத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version