வளர்ந்து வரும் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் காலநிலை நெருக்கடிக்கு மத்தியில், ‘பொறுப்புள்ள நாடுகள் 2026’ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 19ம் தேதி உலக அறிவுசார் அறக்கட்டளை (WIF) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் உலகின் மிகவும் பொறுப்புள்ள நாடாகப் பெயரிடப்பட்டுள்ளது. நிர்வாகம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் தனது சிறப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தையும், டென்மார்க் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இந்த நாடுகள் அவற்றின் நேர்மையான நிர்வாகம், சமூகப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பொறுப்புணர்வுக்காகப் பாராட்டப்பட்டன. இந்த அறிக்கை வழக்கமான உலகளாவிய தரவரிசைகளிலிருந்து வேறுபடுகிறது, ஏனெனில் இது பொருளாதார வலிமை அல்லது இராணுவ சக்தியை மட்டும் பார்க்காமல், ஒரு நாடு அதன் மக்களுக்கும் உலகிற்கும் எவ்வளவு பொறுப்புடன் செயல்படுகிறது என்பதை மதிப்பிடுகிறது.
அதனடிப்படையில், பெல்ஜியம், ஜார்ஜியா, செக் குடியரசு, ஆஸ்திரியா மற்றும் குரோஷியா ஆகியவை முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளன.ஜெர்மனி பதினொன்றாவது இடத்திலும், போர்ச்சுகல் பன்னிரண்டாவது இடத்திலும், பல்கேரியா பதின்மூன்றாவது இடத்திலும், அயர்லாந்து பதினான்காவது இடத்திலும், நார்வே பதினைந்தாவது இடத்திலும் உள்ளன.
உலக வங்கி, IMF, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட ஐநா சபையின் மற்ற அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச ஆதார தரவுகளைப் பயன்படுத்தியே இந்தக் குறியீடு உருவாக்கப் பட்டுள்ளது. இதில் 154 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் குறியீடு நான்கு முக்கிய அடிப்படைகளில் மதிப்பிடப்பட்டன, அவை, நேர்மையான மற்றும் தூய்மையான நிர்வாகம், மக்களின் சமூக நல்வாழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலகத்திற்கான பொறுப்பு ஆகியவை அடங்கும்.
பெரிய பொருளாதாரங்களைக் கொண்டிருந்த போதிலும், பல நாடுகள் பின்தங்கியுள்ளன என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியது. அமெரிக்கா 66வது இடத்திலும், சீனா 68வது இடத்திலும் உள்ளன. பணம் அல்லது அதிகாரம் வைத்திருப்பது மட்டும் பொறுப்புணர்வின் அடையாளம் அல்ல என்பதை இது தெளிவுபடுத்துகிறது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 90வது இடத்தைப் பிடித்தது.
பல ஐரோப்பிய நாடுகள் பட்டியலில் டாப் இடங்களில் உள்ளன, இது நிர்வாகம் மற்றும் சமூகப் பொறுப்பில் அவற்றின் வலுவான கவனத்தைக் காட்டுகிறது. இருப்பினும், மோதல் மற்றும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் மோசமான நிலையில் உள்ளன. சிரியா 153வது இடத்திலும், யேமன் 151வது இடத்திலும், பட்டியலின் அடிப்பகுதியில் உள்ளன.
இந்தியாவின் நிலை என்ன? இந்தியா இந்தப் பட்டியலில் 0.5515 மதிப்பெண்களுடன் 16வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, சுகாதாரம், சமூக சமத்துவம், சுற்றுச்சூழல் திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இருப்பினும், நீண்ட கால செயல்திறனுக்காக இந்தியா சீரான வளர்ச்சி மற்றும் நிலையான கொள்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. ஒட்டுமொத்தமாக, பொறுப்பு என்பது அதிகாரத்தால் மட்டும் கட்டமைக்கப்படுவதில்லை, மாறாக மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் சிறந்த கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளால் கட்டமைக்கப்படுகிறது என்பதை இந்த அறிக்கை நிரூபிக்கிறது.
