எதிர்வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் உங்களுக்கு பல நன்மைகள் வந்து சேரும் என காங்கிரஸ்க்கு அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.

நடிகர் விஜய் தற்போது அரசியலில் அடியெடுத்து வைத்து தனது தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். WORK FROM HOME அரசியல் செய்கிறார், WEEK END அரசியலில் ஈடுபடுகிறார் என பலகட்ட விமர்சனங்கள் விஜய் மீது வைக்கப்பட்டாலும், சமீபத்தில் தனது தவெக கட்சியின் 3-ம் ஆண்டு விழாவை கொண்டாடி இருக்கிறார் விஜய். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி கணிசமான ஓட்டுகளை வாங்கும் என அரசியல் விமர்சகர்களும் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தவெகவுடன் கூட்டணி வைக்க மறைமுகமாக பல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பல மேடைகளில், தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கொடுக்கப்படும் என உறுதியளித்து வருகிறார் விஜய். இதன்மூலம் விசிகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தான் அவர் அழைப்பு விடுக்கிறார் என பலரும் பேசிக் கொண்டனர். இந்த நிலையில் உள்ளூரை தாண்டி இந்தியா அளவிலான கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்து, காங்கிரஸுடன் கூட்டணியில் இணைய முயன்று வருகிறதாம் தவெக.

காங்கிரஸ் தலைவரிடம் போன் மூலமும், மூத்த நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தியிடம் நேரிலும் சென்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்களாம் தவெகவினர். எங்களோடு கூட்டணி வந்தால், காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள், 1 துணை முதலமைச்சர், 6 அமைச்சர் பதவி என வாரி வழங்க தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. அத்தோடு 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் 28 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதாக உறுதியளித்திருக்கிறதாம் தவெக.

இவ்வாறு தவெகவின் அதிரடி ஆஃபர்களால் உறைந்து போன காங்கிரஸ் நிர்வாகிகளும், அங்கு சென்று விடலாமா என யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்களாம். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் நேரடியாக தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என கூறப்படுகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸில் குழு அமைக்கப்பட்டும், இன்னும் திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் விரக்தியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு விஜய்யின் ஆஃபர் ஆடி மாத ஜவுளிக்கடை ஆஃபர் போல் பொருத்தமாக இருப்பதால், திமுக ஜாக்கிரதை என அட்வைஸ் கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version