நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, இன்று ராஜ்யசபாவில் இருந்து ஓய்வுபெறும் 59 உறுப்பினர்களுக்கு (இதில் 37 உறுப்பினர்களுக்கான சிறப்பு அமர்வு இன்று நடைபெற்றது) வழிஅனுப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது” என்று குறிப்பிட்டார். ராஜ்யசபா பதவிக்காலம் முடிவடைவது என்பது பொதுவாழ்வின் முடிவல்ல என்றும், ஓய்வுபெறும் உறுப்பினர்களின் அனுபவம் நாட்டின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

தனது உரையில் எதிர்க்கட்சித் தலைவர்களை வெகுவாகப் பாராட்டிய பிரதமர், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் என்சிபி தலைவர் சரத் பவார் ஆகியோரை முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டினார். இந்த மூத்த தலைவர்கள் தங்களது வாழ்நாளின் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை நாடாளுமன்றப் பணிகளிலேயே அர்ப்பணித்தவர்கள் என்றும், அவர்களது பணி ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது என்றும் புகழ்ந்தார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி-க்கள், இந்த அனுபவம் வாய்ந்த தலைவர்களிடமிருந்து அரசியல் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

மேலும், நாடாளுமன்றத்தை ஒரு “திறந்தவெளிப் பல்கலைக்கழகம்” என வர்ணித்த பிரதமர், இங்கு விவாதங்கள் மூலம் கிடைக்கும் அறிவு ஒரு மனிதனைச் செதுக்கும் எனக் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், தேவகவுடா குறித்து நகைச்சுவையாக ஒரு கருத்தைக் கூறி பிரதமரையும் அவையினரையும் சிரிக்க வைத்தார். கட்சிப் பாகுபாடுகளைக் கடந்து, மூத்த தலைவர்களின் அனுபவத்தை அங்கீகரிக்கும் விதமாக அமைந்த பிரதமரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version