நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை நாளை (மார்ச் 19) வெளியிடுகிறார். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட மாநாட்டில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சீமான் அதிரடி காட்டினார். மற்ற அரசியல் கட்சிகள் இன்னும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் மும்முரமாக இருந்து வரும் வேளையில், தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி ஒரு படி மேலே சென்று தேர்தல் அறிக்கையை வெளியிடத் தயாராகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளதாக அறிவிப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் இல்லாமல், குறிப்பாக, விவசாயிகள், இளைஞர்கள் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அரசுத் துறைகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை மாற்றங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய கட்சிகளின் வரவால் நான்கு முனைப் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களைக் கவரும் வகையில் சீமானின் தேர்தல் அறிக்கை அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
