2025-26ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. இந்த முறை கடைசித் தேதி நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என வரி நிபுணர்கள் எச்சரித்துள்ளதால், கடைசி நேர அவசரத்தைத் தவிர்த்து உடனடியாக ஐடிஆர் தாக்கல் செய்வது மிகவும் அவசியமாகும்.
இன்றைய கெடுவிற்குள் தாக்கல் செய்யத் தவறினால், ரூ.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் ரூ. 5,000 வரை தாமதக் கட்டணம் செலுத்த நேரிடும். அதேசமயம், ரூ.5 லட்சத்திற்குள் வருமானம் உள்ளவர்கள் ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
வரித் திரும்பப் பெறுதல் எந்தவிதத் தடங்கலும் இன்றி, தாமதமின்றி உங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதை உறுதி செய்ய இந்தத் தவறுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அந்தவகையில், சம்பளதாரர்கள் தங்களது நிறுவனம் வழங்கும் Form 16-ஐ மட்டும் வைத்துக் கணக்கைத் தாக்கல் செய்யக் கூடாது. சேமிப்புக் கணக்கு வட்டி, ஃபிக்ஸ்ட் டெபாசிட் வட்டி, பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் கிடைத்த லாபம் (டிவிடெண்ட்) மற்றும் வீட்டின் மூலமான வாடகை வருமானம் போன்ற பிற மூல வருமானங்களையும் கணக்கில் காட்டி தாக்கல் செய்ய வேண்டும்.
உங்களின் வருடாந்திர தகவல் ஸ்டேட்மெண்ட் (Annual Information Statement – AIS) மற்றும் Form 26AS ஆகியவற்றில் உள்ள வருமான விவரங்களும், நீங்கள் தாக்கல் செய்யப் போகும் கணக்கில் உள்ள விவரங்களும் சரியாக ஒத்துப்போகிறதா என்பதைத் தீவிரமாகச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களின் வருமான வகைக்குப் பொருத்தமில்லாத தவறான ITR படிவத்தைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் தாக்கல் செய்த கணக்கு செல்லாததாகிவிடும். இது உங்களது ரீஃபண்ட் நடைமுறையைப் கடுமையாகப் பாதிக்கும்.
வருமான வரிக் கணக்கை இணையத்தில் சமர்ப்பித்த உடனே உங்களது பணி முடிந்துவிடுவதில்லை. சமர்ப்பித்த பிறகு, அதற்குரிய ஆதார் ஓடிபி அல்லது நெட் பேங்கிங் மூலம் உடனடியாக மின்-சரிபார்ப்பு செய்ய வேண்டும். இல்லையெனில், நீங்கள் தாக்கல் செய்த கணக்கு செல்லாது.
தகுதியில்லாத வரி விலக்குகளைக் கோருவது, சாத்தியமில்லாத நன்கொடைகளைக் காட்டுவது மற்றும் பங்குகள், சொத்து விற்பனை மூலமாகக் கிடைத்த மூலதன ஆதாயங்களை மறைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.
அரசாங்கம் வழங்கும் ரீஃபண்ட் தொகை வந்து சேர வேண்டிய உங்களது வங்கிக் கணக்கின் விவரங்கள் துல்லியமாக உள்ளதா என்பதையும், அந்த வங்கிக் கணக்கு வருமான வரித்துறையின் இணையத்தில் ‘Pre-validated’ செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களது பான் அட்டை, ஐடிஆர் கணக்கு மற்றும் பிற அடையாள ஆவணங்களில் உள்ள பெயர், பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தரவுகளில் எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல், அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
