பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை இன்று அமெரிக்க அதிபர் சந்திக்க உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டதை விட முன்னதாகவே டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா திரும்பியதால் இவருடையேயான சந்திப்பு நடக்கவில்லை.
இந்த நிலையில் 35 நிமிடம் இரண்டு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசியுள்ளனர். ஏப்ரல் 22 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளது. மே 6–7 இரவு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே இந்தியா குறிவைத்தது என்பதை பிரதமர் மோடி விளக்கியுள்ளார்.
இந்தியாவின் நடவடிக்கைகள் துல்லியமானவை எனவும், பாகிஸ்தானில் இருந்து வரும் எந்தவொரு துப்பாக்கிச் சூடும் இந்தியாவிலிருந்து வலுவான பதிலடி கொடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவு எப்போதும் முழுமையாக இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடாவிலிருந்து திரும்பும் வழியில் அமெரிக்காவில் சந்திக்க முடியுமா என்று பிரதமர் மோடியிடம் டிரம்ப் கேட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே உள்ள திட்டமிடப்பட்ட அலுவல்கள் காரணமாக அது சாத்தியமிலை என பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். மேலும் இஸ்ரேல்-ஈரான் மோதல், மேலும் ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்தும் விவாதித்தனர். அடுத்த QUAD கூட்டத்திற்கு இந்தியா வருமாறு அதிபர் டிரம்பிற்கு பிரதமர் மோடி அழைப்பு. பிரதமரின் அழைப்பை ஏற்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.