கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக எர்ணாகுளம் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது. பல இடங்களில் நிலச்சரிவு, மண் சரிவு, மரங்கள் விழுவது, கட்டிடங்கள் இடிந்து விழுவது என தொடர்பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில் எர்ணாகுளம் மாவட்டம் கண்ணமலை செல்லானம் பகுதியில் கனமழை காரணமாக கடல் சீற்றம் மற்றும் கடல் அலையால் ஏற்பட்ட அரிப்பால் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்தது. கண்ணமாலையில் மட்டும் சுமார் 50 வீடுகள் சேதமடைந்தன. ஒரு சில வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியது. வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம் அடைந்தன. பலர் உறவினர் வீடுகளுக்கும் வாடகை வீடுகளுக்கும் இடம்பெயர்ந்து உள்ளனர். வயதானவர்கள், நோயாளிகள் என பலர் வீடுகளுக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.

இப்பகுதி மக்கள் பல வருடங்களாக கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பால் ஏற்படும் சேதங்களை சரி செய்ய தடுப்புச் சுவர் கட்டுவதற்காக பல முறை மனு அளித்தும் கேரள அரசு இதுவரை செவி சாய்க்காததால் தொடர் ஆபத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறார்கள்.
மேலும் வீடுகளுக்குள் மார்பளவுக்கு புகுந்த தண்ணீரால் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் வீணாகிவிட்டதாகவும், வாழ்வாதாரம் இழந்து நிற்பதாகவும் கவலை தெரிவிக்கும் மக்கள், அரசு தங்களை உடனடியாக நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும், தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், மேலும் இப்பகுதியில் கடல் நீர் புகுவதை தடுக்க உறுதியான தடுப்புச் சுவர் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், வீடுகளை இழந்து தவித்து வரும் மக்கள் கடந்த இரண்டு தினங்களாக தங்க இட வசதி இன்றி, தன்னார்வலர்கள் தரும் உணவு மருந்து பொருட்களை பயன்படுத்தி வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version