ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்றைய தினம் (18.06.2025) சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது எஞ்சின் சக்கரத்திலிருந்து பயங்கர சத்தம் கேட்டது. ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்துவதற்காக எஞ்சின் வேகத்தை வேகமாக கட்டுப்படுத்தினார். அப்போது ரயில் எஞ்சின் பழுதடைந்து. இதன் காரணமாக ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. ஓட்டுநர் ரயிலில் இருந்து இறங்கி பார்த்தபோது தண்டவாளத்தின் குறுக்கே பெரிய இரும்பு வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் ரயில்வே போலீசார், மற்றும் பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரயில் எஞ்ஜினில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முயன்றனர். பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது சம்மந்தமாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.