ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் தாக்குதலை மேற்கொண்டது. அதில், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளிலும் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் துல்லியமாகத் தாக்கி அழித்தது.
இந்த தாக்குதல்களுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் எல்லை முழுவதும் கடும் பதற்றம் நிலவியது. பாகிஸ்தான் பக்கம் இருந்து தொடர்ச்சியாக இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவற்றை இந்திய ராணுவம் முழுமையாக முறியடித்ததாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கடந்த 10ம் தேதி அறிவித்ததின்பேரில், இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான உயர் மட்ட மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: இந்தியா-பாக். சண்டையை நிறுத்தியது நான் தான்… தம்பட்டம் அடித்துக் கொண்ட டிரம்ப்..
மத்திய அமைச்சரவை கூட்ட முடிவுகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். இதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் ரூ.16,300 கோடியில் அரிய கனிமவள சேகரிப்பு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் ரூ.3,000 கோடியில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.