திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மீன் சந்தையில் மருத்துவக் குணம் கொண்ட ஒரு மீன் ரூ.26,000-க்கு விற்பனையானது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
முத்துப்பேட்டை பகுதி என்பது கடல் சார்ந்த பகுதி. இப்பகுதியில் உள்ள ஆசாத் நகர் மற்றும் பெரியக்கடை தெரு மீன் சந்தைக்கு, பல்வேறு வகை மீன் வகைகள் விற்பனைக்கு குவிக்கப்படும். இதில் குறிப்பாக இப்பகுதியில் உள்ள அலையாத்திகாடு வேர்களில் உற்பத்தியாகி வளரக்கூடிய மீன் வகைகள் அதிக ருசி கொண்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் இப்பகுதியில் உற்பதியாகும் கொடுவா, கெண்டை மீன், வெள்ளாம் பொடி, கத்தாஐ போன்ற மீன்கள் அதிகளவில் விற்பனையாகும். மற்றவகை மீன்கள் அருகேயுள்ள நாகை, கோடியக்கரை, மல்லிபட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து இங்கு விற்பனை கொண்டுவரப்படுகிறது.
முத்துப்பேட்டை அலையாத்திகாடுகள் நிறைந்த லகூன் பகுதியிலிருந்து அதிக மருத்துவ குணம் கொண்ட கத்தாழை மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஒரு கிலோ கத்தாழை மீன் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஆண் கத்தாழை மீனில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த ’நெட்டி’ உள்ளதால், அவ்வகை மீன்களுக்கு போட்டி அதிகம். சென்ற ஆண்டு சுமார் 10 கிலோ கொண்ட 3 கத்தாழை மீன்கள் ரூ.48,900-க்கு விலைபோனது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இந்த விலையை மிஞ்சும் அளவு நேற்று (13.05.2025) ஆசாத்நகர் மீன் மார்க்கெட்டில் மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய 4 கிலோ கொண்ட ஒரு கத்தாழை மீன் ஏலத்திற்கு வந்தது. ரூ.20,000க்கு ஆரம்பிக்கப்பட்ட ஏலம், கடைசியில் ரூ.26,000க்கு விலைபோனது. இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.