ஓர் இரவு கடையின் நேரம் முடிந்துவிட, சில முக்கியஸ்தர்கள் மட்டும் கடையில் மதுவருந்திக்கொண்டு சீட்டாடிக்கொண்டு இருக்க, கடையின் முதலாளி சிவாஜி தூக்கில் தொங்க, இது தற்கொலையாக இருக்கமுடியாது. கொலையாகவும் கூட இருக்கலாம், என்று செம்பன் வினோத் ஜோஸி கூற..
அந்த இரவு…!?அதற்கு முன்னும் பின்னும் நடக்கும் விசாரனையே “ப்ரவின்கூடு ஷாப்பு “”படத்தின் கதை.
மலையாளிகளுக்கே உரித்தான டார்க் காமெடி சஸ்பென்ஸ் திரில்லர் வகை ஜானர். காமெடிக்கு பஸில் ஜோசப் இருக்க, மற்ற கேரக்டர் எல்லாம் அவருக்கு ஏற்ற வகையில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் விசாரனை காட்சிகளை சொல்லலாம்.
தற்கொலை அல்ல, கொலை தான் என்று சௌபின் ஷகிரும், செம்பன் வினோத்தும் பேசிக்கொள்ளும் இடம்.., இயாலாமையும் – இறுமாப்பு கொண்ட இரு துருவங்களை நம் கண்முன் கொண்டு வருகிறார்கள் இருவரும். சாந்தினியும் அவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.
எல்லோரிடம் பகை இருக்கிறவன் திடீரென இறந்து போக, அடுத்து என்னென்ன நடக்குமோ?? அதுவே நடக்கிறது. முன்னமே காரணத்தை யூகிக்க முடிந்தாலும், முன்னும் பின்னும் போய்வருகிறது காலம்.. திரைக்கதையில் எந்தவித குழப்பமும் இல்லை. ஒரு கட்டத்தில் பஸில் ஜோசப் கூட இந்த தற்கொலைக்கு காரணமோ என்று நம்மையும் நம்பவைக்கிறார்கள்.
இந்த மாதிரி கதைக்களம் நிறைய வந்திருந்தாலும் டார்க் காமெடி வகையில் இது கொஞ்சம் புதுசு என்ற வகையில் பார்க்கலாம். போலீஸ் ஸ்டேஷன் விசாரணையில் பஸில் ஜோசபின் உடல் மொழியும், கொலைகாரன் என்னையும் கொல்ல வந்திருக்கான் என்று போனில் ஒரு பெண் பதட்டத்துடன் அழைக்க பட்டாபட்டியுடன், அவர் மோட்டர் பைக்கில் போவதும், அதற்கு பின் நடப்பவையெல்லாம் காமெடியின் உச்சம். அதுவும் அவர் சாந்தினியிடம் வழிவது எல்லாம் தாறுமாறு.
இரவு, கள்ளுக்கடை என்று அந்த இடத்தை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் ஷாஜி கைலாத்தும் கலை இயக்குநரும். முன்பின் பயணிக்கும் திரைக்கதையை குழப்பம் இல்லாமல் எடிட் செய்திருக்கிறார் ஷபியூக் .இந்த மாதிரி திரைகளத்திற்கு இசையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம் விஷ்ணு விஜய். ( என்ன எல்லா டெக்னிஷியன் பேர் எல்லாம் ஷா-லயே தொடங்குது)
மற்றபடி ஓடிடி தளத்திற்கு என்ன தேவையோ அதை கொஞ்சமும் குறையாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷுராஜ் ஷுனிவாசன். சோனியில் இருக்கிறது.
சிரிப்புக்கு கேரண்டி.