கடந்த மாதம் 22-ம் தேதி பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்தியா பதிலடி நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக விமான கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களை செய்துவிட்டு தலைமறைவான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானும் இந்தியா மீது டிரோன் தாக்குதல் நடத்த, அதனை இந்திய ராணுவம் முறியடித்தது. தொடர்ந்து 4 நாட்கள் நடந்த இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான், உலக நாடுகளிடம் கடன் கேட்டது. தொடர்ந்து அமெரிக்கா இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது.

 

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இரவு முழுவதும் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக கூறியிருந்தார். அத்தோடு செய்தியாளர்களிடம் பேசியிருந்த அதிபர் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் சார்ந்து அமெரிக்க அரசு நிர்வாக ரீதியாக முக்கிய பங்காற்றியதாகவும், இரு தரப்புக்கும் இடையே வர்த்தக ரீதியான அழுத்தம் கொடுத்து இந்தப் போரை தவிர்க்க செய்ததாகவும் கூறியிருந்தார். ஆனால் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், இந்த கருத்தை மறுத்திருந்தார். அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தகம் குறித்து ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என கூறியிருந்தார்.

இந்த நிலையில், சவுதி அரேபியா சென்றுள்ள அதிபர் டிரம்ப், அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ”தான் பதவி ஏற்ற நாளிலேயே போரை விரும்பவில்லை எனக் கூறினேன். அதனால் தான் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தினேன். வர்த்தகத்தை முன்னிருத்தி இந்த உடன்பாட்டை எட்ட வைத்தேன். ’நண்பர்களே வாருங்கள் ஒப்பந்தம் செய்வோம், கொஞ்சம் வர்த்தகம் செய்வோம்’ என அவர்களிடம் கூறியதாக” டிரம்ப் கூறியுள்ளார்.

 

”அணு ஏவுகணைகளை வர்த்தகம் செய்ய வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை வர்த்தகம் செய்வோம் என்றேன். அவர்கள் இருவரும் மிகவும் சக்திவார்ந்த தலைவர்கள், மிகவும் வலுவான, நல்ல புத்திசாலி தலைவர்கள் ஆகையால் சண்டையை நிறுத்திவிட்டார்கள். சிறியதாகத் தொடங்கிய போர் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் நிலை உருவாகி இருந்தது” எனக் கூறியுள்ளார். நேற்று (13.05.2025) நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, டிரம்பின் இந்த அறிவிப்பு குறித்து வாய் திறக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அவரது மௌனம் கலையும் போது, இந்த சர்ச்சை முற்றுப்புள்ளி பெற வாய்ப்புள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version