கடவுள் ராமர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மயிலாப்பூரில் அண்மையில் கம்பன் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, கம்ப ராமாயணத்தை மேற்கோள்காட்டி பேசியிருந்தார். அப்போது, அப்போது கடவுள் ராமர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்றும், புத்தி சுவாதீனம் இல்லாதவர் குற்றம் செய்தால் தண்டனை குற்றமாகாது என்பது இந்திய தண்டனை சட்டம் என கூறியிருந்தார்.

வைரமுத்துவின் இந்த கருத்து இந்து மத வழிபாட்டாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதுவையில் பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட பாஜகவினர், வைரமுத்துவின் புகைப்படத்தை கிழித்து எறிந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், “சமீபத்தில் நடந்த திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து இந்துக்கள் போற்றி வணங்கும் பகவான் ஸ்ரீ ராமரை அவதூறாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. “ஆழ்வார்கள் ஆய்வு மையம்” நிறுவி வைணவ பக்தியைப் பரப்புவதாகக் கூறுவது மட்டுமன்றி, கம்பராமாயணத்தையும் ஆய்வு செய்து கொண்டிருப்பதாகச் சொல்கிற திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனும், ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி கொடுத்தோமென பெருமையாகக் கூறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும்ம் வைரமுத்துவின் இத்தகைய இந்துவிரோதப் போக்கை ஆமோதிக்கிறார்களா?.

“மத ஒற்றுமை” குறித்து மேடைக்கு மேடை முழங்கும் திமுகவினர் இதுவரை எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்காதது ஏன்?. அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை திமுக உடன்பிறப்புகள் பலர் இந்து மதத்தவராக இருக்கையில் இதுபோன்ற கருத்துகள் அவர்களது கட்சியினரையும் புண்படுத்தும் என்பது தெரியாதா?.

எனவே, கம்ப ராமாயணத்தை முழுமையாகப் படித்துணராமல், தமிழ் அகராதியின் அடிப்படை அர்த்தம் அறியாமல் வைரமுத்து போன்றோர் தங்கள் இஷ்டத்திற்கு திரித்துப் பேசுவது கண்டனத்திற்குரியது. தனது இந்த அவதூறான கருத்துகளுக்கு பொதுவெளியில் அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். தங்களை மத நல்லிணக்கத்தின் தூணாக முன்னிறுத்திக் கொள்ளும் ஆளும் அரசு அதை உறுதிப்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version