நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், சர்க்கரை விலையைக் கட்டுக்குள் வைக்கவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம் (DGFT) வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்தத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், செப்டம்பர் 30, 2026 வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சா சர்க்கரை (Raw sugar), வெள்ளை சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என மூன்று வகைகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://x.com/ANI/status/2054736874582028706?
உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதைத் தடுக்கவும், தட்டுப்பாடின்றி சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கான சி.எக்ஸ்.எல் (CXL) மற்றும் டி.ஆர்.க்யூ (TRQ) ஒதுக்கீட்டின் கீழான ஏற்றுமதிக்குத் தடை இல்லை என்றும் மேலும், மற்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்பைக் கருதி அரசுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலம் நடக்கும் ஏற்றுமதிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளராக உள்ளது. கரும்பு விளைச்சல் அதிகம் இருக்கும் எனக் கணித்து கடந்த காலங்களில் 1.5 மில்லியன் மெட்ரிக் டன் வரை ஏற்றுமதிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால், முக்கிய மாநிலங்களில் கரும்பு விளைச்சல் குறைந்ததால், நாட்டின் உற்பத்தி தேவையை விடக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் இந்த முடிவால் சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை உயர வாய்ப்புள்ளதாகவும், தாய்லாந்து மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு இது சாதகமாக அமையலாம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
