இந்தியப் பெருங்கடலில் ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இந்தியக் கடற்கரைக்கு மிக அருகிலேயே இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு விடப்பட்ட எச்சரிக்கை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “போர் இப்போது இந்தியாவின் வாசலுக்கே வந்துவிட்டது” என்று கூறிய அவர், இந்த இக்கட்டான சூழலில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது., ”உலகமே நிலையற்ற கட்டத்துக்கு நுழைந்துள்ளது. கொந்தளிக்கும் சூழல் நிலவுகிறது. இந்தியாவின் எண்ணெய் விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நமது இறக்குமதியில் 40 சதவீதம் ஹார்முஸ் நீர்வழிப் பாதை வழியாகவே வருகின்றன. எல்பிஜி மற்றும் எல்என்ஜி நிலைமையும் மோசமாக உள்ளது.

இந்தியப் பெருங்கடலில் ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கி மூழ்கடித்துள்ளது. ஆனால், பிரதமர் எதுவும் கூறாமல் மெளனம் காக்கிறார். இதுபோன்ற சூழலில் நமக்கு ஒரு நிலையான தலைவரே தேவை. ஆனால், அமெரிக்காவிடம் நாட்டையே விட்டுக் கொடுத்த சமரசப் பிரதமரை நாம் கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version